6 ஓட்டங்களால் பெற்ற வெற்றியால் தென்ஆப்பிரிக்காவுக்கான அரைஇறுதி வாய்ப்பு நீடிக்கிறது!

6 ஓட்டங்களால் பெற்ற வெற்றியால் தென்ஆப்பிரிக்காவுக்கான அரைஇறுதி வாய்ப்பு நீடிக்கிறது!

வங்காளதேசத்தில் நடந்து வரும் 5-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர்-10 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. 

சிட்டகாங்கில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் தென்ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். 

நாணயசுழற்சியை வென்ற நெதர்லாந்து அணி தலைவர் பீட்டர் போரென், முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா முதல் ஓவரிலேயே குயின்டான் டீ காக்கின் (0) விக்கெட்டை இழந்தது. 

இறுதியில் 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. நெதர்லாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆசன் மாலிக் ஜமில் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பெற்றார். 

இந்த உலக கிண்ண போட்டிகளில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளரும் இவர் தான். அது மட்டுமின்றி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஐ.சி.சி.யில் நிரந்தர அந்தஸ்து பெற்றுள்ள ஒரு அணிக்கு எதிராக, உறுப்பு நாட்டை சேர்ந்த வீரர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது. 

அடுத்து 146 ஓட்டங்கள் இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடியது. ஸ்டீபன் மைபர்க்கும், மைக்கேல் ஸ்வார்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். 

முடிவில் நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய நெதர்லாந்து அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.