21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வௌியே வந்தார் ஜெ!

21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வௌியே வந்தார் ஜெ!
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் (இந்திய ரூபாய்) விதித்தது. 
 
இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 
 
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. 
 
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் ஜெயலலிதாவை பிணையில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர். 
 
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணை மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு பிணை வழங்க உத்தரவிட்டனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி 
 
இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றம் வந்தார். 
 
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (17ஆம் திகதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு முன்னர் நடைபெற்றது. 
 
ஜெயலலிதா தரப்பு வாதம் 
 
ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன், "ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. பிணை பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார். 
 
அப்போது நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். 
 
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி வாதிட்டார். 
 
ஜாமீன் வழங்கி உத்தரவு 
 
இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். 
 
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும், 3 மாதத்தில் விசாரித்து முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
மேலும், 2 மாதத்திற்குள் கோப்புகளை சரிபார்த்து கர்நாடக நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்றும், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். 
 
அதிமுகவினர் மகிழ்ச்சி 
 
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 
 
இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் பிணை கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது.