“ஆம், நாங்கள் தற்போது எமக்கென்றொரு தேசத்தைக் கொண்டுள்ளோம்” – பாலஸ்தீனிய அதிபர் அபாஸ்

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனியர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் ஞாயிறன்று மேற்குக்கரைக்கு திரும்பிய பாலஸ்தீனிய அதிபர் மஹமுட் அபாஸ், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் “ஆம், நாங்கள் தற்போது எமக்கென்றொரு தேசத்தைக் கொண்டுள்ளோம்” என உற்சாகப் பெருமிதத்துடன் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, 138-9 என்ற வாக்குகளின் அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நிலை [non-member state observer status] வழங்கப்பட்ட மூன்று நாட்களின் பின்னர், “ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் மிக வரலாற்று முக்கியத்துவம் மிக்க சாதனை ஒன்றை அடைந்துள்ளது” என மேலும் அபாஸ் தனது மக்களிடம் தெரிவித்தார்.

”பாலஸ்தீனம் என்கின்ற தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் இன்றி பாலஸ்தீனம் சுதந்திர தேசமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இங்கு ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என இந்த உலகம் உரத்த குரலில் அறிவித்துள்ளது” எனவும் திரண்டிருந்த தனது மக்கள் முன் அதிபர் அபாஸ் தெரிவித்தார்.

பாலஸ்தீனம் ஐ.நாவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், பாலஸ்தீனயர்களுக்கிடையில் ஒற்றுமையைப் பலப்படுத்துவதுடன், பற்றா மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதுமே தனது முதன்மையான, மிக முக்கியமான நோக்காக உள்ளதாக இந்நாட்டு அதிபர் மேலும் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்கத் தேவையான அத்தியாவசியமான நகர்வுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், பிரிவினைகள் முடிவுக்கு கொண்டு வரப்படுவதையே மக்கள் விரும்புவதாகவும் அதிபர் அபாஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஆண்டில் பாலஸ்தீனிய அதிபர் முயற்சி எடுத்தபோதும் அது வெற்றியளிக்காததால், தற்போது ஐ.நா பொதுச்சபையில் பெற்றுக் கொண்ட அமோக வெற்றியானது பாலஸ்தீனிய மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை அதிகாரம் மிக்க ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடான அமெரிக்கா எதிர்த்து நின்றதாலேயே இதில் காலதாமதம் ஏற்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நிலை வழங்குவதைக் கூட எதிர்த்த போதிலும், பொதுச்சபையில் இதற்கான எதிர்ப்பு குறைந்த நிலையில் பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் போன்ற முக்கிய அனைத்துலக அமைப்புக்களில் பாலஸ்தீனமானது மிக இலகுவில் தனது பிரச்சினைகளை முதன்மைப்படுத்துவதற்கும், பல ஆண்டுகளாக இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்பட்ட சமரசப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து நாடு திரும்பிய பாலஸ்தீனிய அதிபர் தனது வாகனத்திலிருந்து இறங்கி றமல்லாவில் அமைந்துள்ள அதிபர் செயலகம் வரை நடந்து செல்லும் வரை சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.

அதிபர் செயலக வளாகத்திற்குள் புதைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் முன்னாள் அதிபர் மறைந்த யசீர் அரபாத்தின் புதைகுழியில் மலர்வணக்கம் செலுத்திய அதிபர் அபாஸ், அதன் பின்னர் ஜ.நா வில் பெற்றுக் கொண்ட வெற்றியை மறைந்த அதிபரின் நினைவாக சமர்ப்பித்தார்.

உலகெங்கும் பரந்து வாழும் பாலஸ்தீனியர்கள் பெற்றுக் கொண்ட வெற்றியாக இது காணப்படுவதாகவும், ஐ.நாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற இந்த அங்கீகாரமானது பாலஸ்தீனிய வரலாற்றில் முக்கிய படிக்கல்லாக காணப்படுவதாகவும் அபாஸ் அப்போது குறிப்பிட்டார்.

“உலகெங்கும் வாழும் பாலஸ்தீனியர்களே உங்களது தலைகளை உயர்த்திக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் பாலஸ்தீனியர்கள். நீங்கள் பாலஸ்தீனியர்கள் என அங்கீகரிக்கப்பட்டதால், ஆக்கிரமிப்புக்களிலிருந்து விடுதலையாகி பலம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். விரைவில் உலகப் பந்தில் பாலஸ்தீனிய தேசமும் வரையப்படும்” எனவும் அதிபர் பெருமகிழ்வுடன் கூறினார்.

“பாலஸ்தீனிய தலைமை இன்று சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளதால், நான் இந்த மகிழ்வைக் கொண்டாடுவதற்காக இங்கு வந்துள்ளேன். எமது வாழ்வில் நாம் ஒருபோதும் சந்தித்திராத மிக மகிழ்ச்சியான தருணம் இதுவாகும்” என நபுலுசிலிருந்து மேற்குக்கரைக்கு வந்திருந்த பஜிஸ் பனி படில் குறிப்பிட்டார்.

“தனிநாடாக அங்கீகரிக்கப்படுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்லாத போதிலும் அதிபர் அபாஸ் எம்மை வரலாற்று நிலையிலிருந்து பிறிதொரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது நாம் மேலும் சுமையை சுமக்கவேண்டியுள்ள போதிலும், நாங்கள் ஒன்றுபட்டு நிற்கும் போது இச்சுமைகள் எம்மை ஒன்றும் செய்துவிடாது” என 54 வயதான மொகமட் பனி ஊடே தெரிவித்தார்.

பாலஸ்தீனியர்கள் ஐ.நாவில் தமக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடுகின்ற போதிலும், இந்நாடானது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. பாலஸ்தீனிய அதிகார சபையிடமிருந்து ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட நிதி மீளவும் வழங்கப்படாது தொடர்ந்தும் தான் தக்கவைத்திருக்க முடியும் என அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில், பாலஸ்தீனியர்களுக்காக சேகரிக்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள் வரையான வரிப்பணம் மீளளிக்கப்படாது என இஸ்ரேல் ஞாயிறன்று அறிவித்துள்ளது.

இந்த வெற்றிக்குப் பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் 3000 இஸ்ரேலிய குடியிருப்புக்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.