வெளிச்சவீடு அமைத்துத் தருமாறு யாழ். கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிச்ச வீடுகள் யாவும் யுத்தம் காரணமாக அழிவடைந்துள்ளதால் அதனை புனரமைத்த தருமாறு கட்றதொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை யாழ். பிரதேச செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடற்தொழிலாளர்களால் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக யாழ் குடாநாட்டில் இருந்த வெளிச்ச வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பருத்தித்துறை மற்றும் பாசையூர் பகுதிகளில் உள்ள வெளிச்ச வீடுகளின் அத்திவார கட்டிடங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.

இதனால் கடற்தொழிலலுக்குச் செல்லும் மீனவர்கள் திசை மாறிச் செல்லும் நிலை எற்படுகின்றது. இதனால் குறித்த பகுதிகளில் வெளிச்ச வீடு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீரியல் வளத்திணைக்களத்தின் பிரதிநிதி, வெளிச்சக்கம்பங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ள கடற்தொழிலாளர்கள் வெளிச்சக்கம்பங்களால் ஏற்படக்கூடிய குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதனை நிராக்கரித்தனர்.

அத்துடன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிய மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருவதால் எமது கடற்தொழில் பாதிக்கப்படுவதாகவும் இதனால் இங்குள்ள மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கடற்தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தான் நீரியல் வளதத்தறை அமைச்சின் செயலாளருடன், ஏனைய துறைசார்ந்த அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு விரைவில் முடிவெடுப்பாக கடற்தொழிலாளர்களிற்கு அமைச்சர் உறுதியளித்தார்.