வடபகுதியின் அபிவிருத்திக்கு அதிகளவு நிதியொதுக்கீடு வடக்கு மாகாணசபை எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லை - ஜனாதிபதி

வடபகுதியின் அபிவிருத்திக்கு அதிகளவு நிதியொதுக்கீடு வடக்கு மாகாணசபை எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லை - ஜனாதிபதி
வடபகுதியின் அபிவிருத்திக்கு அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும் வடக்கு மாகாண சபை எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்றைய தினம் (12) இடம்பெற்ற காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும் வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் நீங்கள் உங்கள் உறவுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளீர்கள் என்பதுடன் அக்காலப்பகுதியில் நீங்கள் அனுபவித்த துன்ன துயரங்களையும் நான் நன்கறிவேன்.
 
யுத்தம் நிறுத்தப்பட்டதன் பின்னர் மக்கள் பட்ட கஸ்ரங்களுக்கு தீர்வு கண்டு வருகின்றோம். 
 
அந்தவகையில் தான் உங்களது காணிகளுக்கு நீங்கள் மீண்டும் செல்ல வேண்டுமென்பதுடன் மின்சாரம், சுகாதாரம், கல்வி, வீதி அபிவிருத்தி என பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளோம்.
 
அந்தவகையில் நீங்கள் இழந்த காணிகளையும் தங்க ஆபரணங்களையும் மீண்டும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நீங்கள் தெரிவு செய்த ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் வடக்கு மாகாண சபை பிரதிநிதிகள் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்பதே எனது விருப்பமாகவுள்ள போதிலும் அவர்களுக்கான எனது கடமைகளை நான் சரியாக செய்து கொண்டிருக்கின்றேன்.
 
ஆனால், அவர்கள் மக்களுக்கு ஏதேனும் செய்கின்றார்களா இல்லையா என்பதை நீங்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
இன்றைய இக்கூட்டத்திற்கு வடக்கு முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வருகைதரவில்லை. அவ்வாறு வருகைதந்திருந்தால் உண்மைநிலை வெளிப்பட்டு விடும் என்பதே பிரதான காரணமாகும்.
 
அந்தவகையில் யாரிடம் சேவை செய்ய வேண்டுமென்று நீங்கள் பொறுப்புக் கொடுப்பீர்களோ அவர்கள் எதையும் செய்வதுமில்லை செய்வதற்கு எம்மை விடுவதுமில்லை.
 
அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்பதை அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு வடபகுதி மாணவர்களே அதிகளவில் தெரிவாகியுள்ளனர். 
 
அந்தவகையில் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  
 
அரசஉத்தியோகத்தர்கள் இன மத மொழி பேதமற்ற வகையில் பணியாற்ற வேண்டும். இந்நிலையில் தற்போது உங்களுக்கு அமைதியான நிம்மதியான காலம் பிறந்துள்ள நிலையில்  20 ஆயிரம் பேருக்கு காணிஉறுதிகள் வழங்கப்படும் அதேவேளை, தங்க ஆபரணங்களும் மீளக் கையளிக்கப்படுகின்றன.
 
எனவே, எதிர்காலத்தில் தவறான வழியில் கேட்டுக் கொள்ளும் அதேவேளை, வடமாகாணத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் அனைத்தும் பொதுமக்களின் நலன்களுக்காக வடக்கு மாகாணசபை பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
 
நாம் உதவிகள் செய்வது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதல்ல ஜனநாயக ரீதியில் நீங்கள் ஒன்றுபட்டு உங்களுக்காகவும் உங்கள் எதிர்காலத்திற்காகவும் வாழ வேண்டுமென்பதற்காகவுமே என்றும் தெரிவித்தார்.