வங்காலையில் அதிசயம்! வற்றாமல் பீறிட்டுப் பாயும் நீரூற்று!

வங்காலையில் அதிசயம்! வற்றாமல் பீறிட்டுப் பாயும் நீரூற்று!
மன்னாரில், வங்காலை, இரத்தினபுரி கிராமத்தில், சிறிதாக தோண்டப்பட்ட குழியொன்றில் இருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுக் கிளம்பியுள்ளது. 
 
வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்தே தொடர்ச்சியாக நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிக்கு அருகாமையில் பரிசோதனைக்காக குழியைத் தோண்டிய போது தொடர்ச்சியாக நீர் பாய ஆரம்பித்தது. நிலத்தடி நீரே ஊற்றாக 24 மணி நேரமும் பாய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், குறித்த நீரூற்றைப் பார்வையிட்டதோடு அந்த நீரையும் சுவைத்துப் பார்த்தார். 
 
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன், குறித்த நீர் 24 மணி நேரமும் பாய்ந்து கொண்டிருக்கிறது. குடிப்பதற்கு சுவையாக உள்ளது. குறித்த நீரை சுத்தம் செய்து மக்களின் பாவனைக்கு பயண்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகில் கடல் இருக்கின்ற போதும் நீரில் எவ்வித உவர்ப்புத் தன்மையும் இல்லை. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். வங்காலை மக்களும், அதனை சூழ்ந்துள்ள கிராம மக்களும் குறித்த நீரை பயண்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.