லாரன்ஸ் மீது மோசடி வழக்கு

லாரன்ஸ் மீது மோசடி வழக்கு
நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். நாகார்ஜுனா, ஜோதிகா நடித்த ‘மாஸ்’ படம் மூலம் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார்.
 
அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் ‘ஸ்டைல், டான், ரிபெல்,’ ஆகிய படங்களை இயக்கினார்.
 
தமிழில் ‘முனி, முனி 2 – காஞ்சனா’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார்.
 
தெலுங்கில் பிரபாஸ், தமன்னா நடித்து 2012ல் வெளிவந்த ‘ரிபெல்’ படம் படுதோல்வியைச் சந்தித்தால் ராகவா லாரன்ஸ் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். அந்தப் படத்தை தயாரித்த பகவான், புல்லா ராவ் ஆகியோருடன் ராகவா லாரன்ஸ் படத்தை 23 கோடிக்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளார்.
 
படப்பிடிப்பு முடிந்து பார்த்தால் படத்தின் செலவு 28 கோடி ரூபாய் வரை செலவாகியிருக்கிறது. அதனால் மேற்கொண்டு ஆன செலவான 5 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளார்கள்.
 
ஆனால், அந்தப் பணத்தை திருப்பித் தர ராகவா லாரன்ஸ் தயங்கியுள்ளார். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளும் பயனளிக்காமல் போகவே ராகவா லாரன்ஸ் மற்றும் அவருடைய உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதையடுத்து ராகவா லாரன்ஸ் கைது செய்யப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.