யாழ். மாவட்டத்தில் மழையால் தாழ்நில பகுதி மக்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் மழையால் தாழ்நில பகுதி மக்கள் பாதிப்பு

 

யாழ். மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள 310இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இப்பகுதி மக்கள், கடந்த மாதமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வெள்ளம் வழிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டன. 
 
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 இலட்சத்து 7 ஆயிரத்து 700 ரூபாய் பெறுமதியான உலர் உணவுகளும் வழங்கப்பட்டன.  இந்நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கான நிவாரணங்களை விரைந்து வழங்கும்படி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, புதன்கிழமை (26) யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
 
அதனடிப்படையில், வெள்ள அனர்த்தங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் கையிருப்பு நிதியின் மூலம் நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.