யாழ்.குடாவில் 407 பேர் கடந்த வாரங்களில் கைது ;எஸ்.எஸ்.பி

யாழ்.குடாவில் 407 பேர் கடந்த வாரங்களில் கைது ;எஸ்.எஸ்.பி

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட  நடவடிக்கையில் 407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.    

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    

அவர் மேலும் தெரிவிக்கையில்,   யாழ். குடாநாட்டில் பாரிய குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.     

அந்தவகையில் கடந்த வாரங்களில் காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கையில் 407 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.   

அதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் 69 பேரும், சூழலை மாசுபடுத்தினர் என 12 பேரும், வீதி விபத்து தொடர்பில் 09 பேரும், துன்புறுத்தியமை தொடர்பில் ஒருவரும், ஏனைய குற்றங்களுக்காக 33 பேரும், சந்தேகத்தில் 55 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 52 பேரும், களவு தொடர்பில் 13 பேரும், குடி போதையில் கலகம் விளைவித்த 11 பேரும், குடித்துவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்தில் 26 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி இரும்பு ஏற்றிச் சென்ற 02 பேரும், இராணுவ சீருடைக்கு சமனான சீருடை வைத்திருந்த ஒருவரும், பொது இடத்தில் வைத்து மது அருந்திய 06 பேரும் , கொள்ளையுடன்  தொடர்புடைய 07 பேரும் மற்றும் கத்தியால் வெட்டி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவருமாக 298 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்.    

அதேவேளை, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றத்துடன் தொடர்பு பட்டவர்கள் என 02 பேரும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த  05 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 பேரும், சந்தேகத்தில் 12 பேரும் , குடிபோதையில் வாகனம் செலுத்திய 05 பேரும் மற்றும் ஏனைய குற்றத்திற்காக 61 பேருமாக 109 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.