முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் பொலிஸார்

முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் பொலிஸார்
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு பொலிஸாரால் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
பூஸா தடுப்பு முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 10பேருக்கு முதற்கட்டமாக காலியிலுள்ள தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
பாரவூர்தி மற்றும் பெக்கோ லோடர், ஸ்கவேட்டர் உள்ளிட்ட வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட ஒரு மாத கால பயிற்சிகளே இதன்போது வழங்கப்பட்டுள்ளன. 
 
இவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டவர்கள், கடந்த 13ஆம் திகதியுடன், தங்களது ஒரு மாத கால பயிற்சியை நிறைவு செய்துகொண்டுள்ளனர். 
 
தொடர்ந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.