மிரட்டும் ஐ...

மிரட்டும் ஐ...

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று திங்கட்கிழமை, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹொலிவூட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் கலந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

பாடல்களை வெளியிடும் நேரத்தில் விழாவிலிருந்து அர்னால்ட் வெளியேறிவிட, ரஜினியே பாடல்களை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். இதன்போது ரஜினி பேசியதாவது,
 
நிச்சயமாக இந்த விழா ஒரு இசை வெளியீட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.

சினிமாவில் 20 ஆண்டுகளாக ஷங்கர் பயணம் செய்கிறார். அவரின் முதல் படத்திலிருந்து அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் மேலே மேலே தான் சென்றுகொண்டிருக்கிறார். இந்த ஐ படம், அவர் இதுவரை இயக்கிய படங்களில் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. இதற்கு மேல் அடுத்த படியாக அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இன்னும் அவரிடம் நிறைய இருக்கிறது. அவர் விரைவில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஹொலிவூட்டில் பல விடயங்களைச் செய்கிறார்கள், நம்மிடம் திறமைசாலிகள் இல்லையா? ஏன் நாம் தமிழ் சினிமாவில் அதை செய்யக்கூடாது என்று நினைத்து, பல முயற்சிகளைச் செய்கிறார். தமிழ் சினிமாவை, ஹொலிவூட் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஷங்கர். பணம், நேரம் இதை எல்லாம் பார்க்காமல் உழைக்கும் உண்மையான சினிமா இந்தியன் அவர்தான்.

அவருக்கு பக்கபலமாக நம் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். ரஹ்மான் அவர் தாயாரிடம் சென்று, 'எந்த ட்யூன் போட்டாலும் ஷங்கர் வேண்டாம் என்கிறார் என்று சொல்லி அழுததாக நான் கேள்விப்பட்டேன். அந்த அளவுக்கு ஷங்கர் அவரிடம் வேலை வாங்குவார் என்று எனக்குத் தெரியும்.

இந்த படத்தின் நாயகன் சீயான் விக்ரம். ஓ போடு சீயான், இனி ஐ சீயான் என அழைக்கப்படுவார். தன் உடலை வருத்திக்கொள்ளும் ஒரு நடிகர் அவர். விக்ரமைப் போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை, இந்தியாவில் இல்லை, ஹொலிவூட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு சீனியர் நடிகன் என்ற முறையில் விக்ரமை என் இதயத்தில் இருந்து பாராட்டுகிறேன்.

ஷங்கர் - விக்ரம் இந்த கொம்பினேஷன் தொடர்ந்து பல படங்களைக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என ரஜினி மேலும் தெரிவித்துள்ளார்.