மாற்றான் கதை உருவானது எப்படி ? இயக்குனர் விளக்கம்

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். மாற்றான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இச்சந்திப்பில் சூர்யா கூறுகையில், உடலால் ஒட்டியிருந்தாலும் குணத்திலும் கொள்கையிலும் எதிரெதிர் துருவங்களை கொண்டுள்ள சகோதரர்களின் பாத்திரங்களில் நான் நடித்துள்ளேன்.

கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு நடிப்பாலும், குரலாலும் வேறுபடுத்தி நடித்தேன். தமிழ், தெலுங்கு மொழிகளில் ´மாற்றான்´ வெளியாகிறது. தெலுங்கில் நான் நடித்த ஒரு கதாபாத்திரத்திற்கு கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.

பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் உட்பட இரட்டையர்கள் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் சிரமப்பட்டு அர்பணிப்போடு உழைத்துள்ளேன் என்றார் ´மாற்றான்´ நாயகன் சூர்யா.

இப்படம் பற்றி மாற்றான் இயக்குநர் கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக the performance capture technique (facial) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். கிட்டத்தட்ட 400 கணனி கிராபிக்ஸ் தொழில் நுட்பக்கலைஞர்கள் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணியாற்றியுள்ளார்கள்.

இரட்டையர்கள் வரும் காட்சிகள் இரு முறை படமாக்கப்பட்டது. ஏற்கனவே படமாக்கப்பட்ட ஒரு காட்சி பல நாட்களுக்கு பிறகு அதே லைட்டிங்குடன் மீண்டும் படமாக்கப்பட்டது.

அகிலன் ரோலில் நடித்த சூர்யா, அதே காட்சியில் விமலன் ரோலில் நடிப்பார். இதனை ஐந்து கமராக்களில் படமாக்கி, கிராபிக்ஸ் உதவியுடன் திரையில் இரண்டு சூர்யாக்களை உருவாக்கினோம்.

ஸ்ரீநிவாஸ் மோகன் மேற்பார்வையில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கப்பட்டன. ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியமான சில தொழில் நுட்பங்களை, இங்கு இருக்கும் வசதிகளை கொண்டு செய்து காட்டியதில் கமராமென் சௌந்திரராஜனின் பங்கு மிக முக்கியமானது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் முத்துகுமார், பா.விஜய், விவேகா, தாமரை, கார்க்கி எழுதிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக ஒலிக்கின்றன.

பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகள், ராஜீவனின் தத்ரூப செட், எடிட்டர் ஆண்டனியின் பரபரப்பான படத்தொகுப்பு, பானுவின் மேக்-அப் மேஜிக் எல்லாம் இணைந்து எனது கனவுப்படமாக ´மாற்றானை´ உருவாக்கியுள்ளேன்.

இந்த கமெர்சியல் பொழுதுபோக்கு படத்தில் சமூக விஷயங்களையும் இணைத்துள்ளேன். கதைக்கு சம்பந்தமான முக்கிய விஷயங்களை பற்றியும், பல புத்தகங்களை படித்தும், வல்லுனர்களின் கருத்தை கேட்டும் ஒவ்வொரு காட்சியையும் அமைத்திருக்கிறோம் என்று கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.