மஹரகமவில் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! - மதுரங்குளியில் ஒருவர் தற்கொலை - வன்முறைகள் ஆரம்பம்!

மஹரகமவில் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! - மதுரங்குளியில் ஒருவர் தற்கொலை - வன்முறைகள் ஆரம்பம்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வோம் என்ற கோஷத்துடன் மஹரகமவில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
 
மஹரகம அமைப்பாளரும், நகராதிபதியுமான காந்தி கொடிகாரவின் ஆதரவில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுண கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
 
அரசாங்கத்தின் பலத்தைக் காட்டும் வகையில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மஹரகம நகரத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கையில் ஸ்தம்பிதம் ஏற்பட்டு, கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
முகத்துவாரத்தில் கொலை– மதுரங்குளியில் ஒருவர் தற்கொலை
 
கொழும்பு முகத்துவாரம் சென் அன்ட்ரூ பிரதேசத்தில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
34 வயதான உயிரிழந்த நபரின் வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற சிலர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
 
இதில் காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
 
அதேவேளை புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தல் வர்த்தகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
 
இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
 
தும்பு ஆலை ஒன்றின் உரிமையாளரான 60 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
 
தனது சொந்தமான துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டதாக மதுரங்குளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்! குருநாகலையில் பதற்றம்
 
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தேர்தல் வன்முறைகள் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளன.
 
இதன் முதலாவது வன்முறை களுத்துறை மக்கோன சந்தியில் பதிவாகியுள்ளது. இங்கு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேருவளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உறுப்பினர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவத்தில் சமில ரணசிங்க என்பவரே காயமடைந்தவராவார். இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
 
இதேவேளை, நேற்று மாலை குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளன.
 
இந்தச் சம்பவத்தில் மாவத்தகம பிரதேச சபைத் தவிசாளரின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கிடையே பொலன்னறுவை மாவட்டத்தில் நாமலின் குண்டர் படைத் தளபதி ரொஷான் தலைமையிலான குழுவினர் மைத்திரிபாலவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஐ.தே.க.வினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.