புகலிடக்கோரிக்கையாளர்கள் நௌரு தீவுக்கு அனுப்பி வைப்பு!

புகலிடம் கோரி அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் நேற்றிரவு நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
தஞ்சம் கோரிய 157 புகலிடக்கோரிக்கையாளர்களும் ஒரு மாதத்துக்கு மேலாக சுங்க கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் ஒதுக்குப் புறமாகவுள்ள கேட்டின் தடுப்பு முகாமுக்கு கடந்தவாரம் கொண்டு செல்லப்பட்டனர்.
 
இந்த அகதிகள், இந்தியாவில் இருந்து புறப்பட்டனர் என்பதால், இந்திய அதிகாரிகளை இந்த அகதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அகதிகள் இந்திய அதிகாரிகளைச் சந்திக்க மறுத்து விட்டனர்.
 
இதையடுத்து, அகதிகளைப் பாதுகாப்பாக இந்தியா செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அகதிகள் அதனை நிராகரித்து விட்டனர்.
 
இந்தநிலையில், கேட்டின் தடுப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 9.30 மணியளவில் மூன்று விமானங்கள் மூலம், குறித்த புகலிடக் கோரிக்கை யாளர்கள் 157 பேரும் நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.