பாரிசில் கே.பி குழுவினர் மூவர் கைது!

பிரான்சில் போட்டி மாவீரர் தின நிகழ்வை நடாத்த முற்படும் கே.பியின் தலைமைச் செயலகக் கும்பலை சேர்ந்த மூவர் பிரெஞ்சு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கே.பியின் தலைமைச் செயலகத்தின் பிரான்ஸ் இணைப்பாளரான தமிழரசன் (கரிகாலன் அல்லது தென்னா), அவரது உதவியாளர்களான முத்தலி, அமுதன் ஆகிய மூவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று பிரெஞ்சு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பாரிசில் உள்ள வணிக நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த கேணல் பரிதி அவர்களுக்கான வீரவணக்க சுவரொட்டியைக் கிழித்தெறிந்துவிட்டு அதன் மேல் தமது போட்டி மாவீரர் தின சுவரொட்டியை ஒட்டுவதற்கு இவர்கள் முற்பட்ட பொழுது, அதனை பொதுமக்களும், வணிக நிலையப் பணியாளர்களும் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து வணிக நிலையப் பணியாளர்களையும், பொதுமக்களையும் மிரட்டி அங்கு வன்முறையில் ஈடுபடுவதற்கு இவர்கள் ஆயத்தமாகிய பொழுது பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பிரெஞ்சு காவல்துறையினர் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

கேணல் பரிதியின் படுகொலையை கே.பியின் தலைமைச் செயலகம் ஊடாக சிங்கள அரசு அரங்கேற்றியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் உலகத் தமிழர்களிடையே வலுவடைந்து வரும் நிலையில், இன்று இவர்கள் மூவரும் பொது இடத்தில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டமை மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கத்துடன் கேணல் பரிதி அவர்களை சிங்கள அரசு படுகொலை செய்திருக்கக்கூடும் என்ற ஐயத்தை தற்பொழுது மக்களிடையே மேலோங்க வைத்திருப்பதாக சங்கதி-24 இணையத்தின் பிரான்ஸ் செய்தியாளர் அறியத் தந்துள்ளார்.