நைஜீரியாவின் லாகோஸ் தீவில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து

லாகோஸ் : நைஜீரியா நாட்டின் பெரிய தொழில் நகரமாக விளங்குவது லாகோஸ் தீவு. இங்குள்ள ஒரு பட்டாசு கிடங்கில் நேற்று, திடீரென்று பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மளமளவென்று பரவிய தீயில் அருகில் இருந்த 9 கட்டிடங்கள் சேதமடைந்தன. கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தொடர்நது வெடித்து சிதறின. இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தவர்கள் மீதும் தீப்பிழம்புகள் தெறித்தன. விமானம் வெடித்து, நொறுங்கி விழுந்தது போலவும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போலவும் சத்தம் கேட்டதாக அப்பகுதி வாசிகள் கூறினர்.இந்த விபத்தில், கிடங்கில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் நாசமாகின. அந்த கட்டிடத்தின் சில பகுதி இடிந்து தரைமட்டமாகியது. சம்பவம் நடந்த இடத்தில் எழுந்த புகைமூட்டம் லாகோஸ் நகரம் முழுவதும பரவியது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.