நேபால் பஸ் விபத்தில் 30 பேர் பலி; 12 பேர் காயம்

நேபாலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாலின் தென் மேற்கு பகுதியிலுள்ள மலை சாலையில் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நேபால் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளானவர்கள் மேற்படி கிராமத்திலிருந்து 50 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 22 ஆண்களும் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபால், சித்வான் கிராமத்திற்கு அருகில் உள்ள மலையடி வாரத்தில் மேற்படி பஸ் இன்று அதிகாலை பயணித்துள்ளது. குறித்த மலை சாலையில் கடுமையான மூடுபனி காணப்பட்டதுடன் பஸ் குடைசாய்ந்து சுமார் 600 மீற்றர் தூரம் வரை புரண்டு புரண்டு சென்றுள்ளதாக நேபால் பொலிஸ் அதிகாரிகாயன ராமேஷ் பஹதூர் தெரிவித்துள்ளார். 

மீட்பு பணியாளர்களும் கிராமவாசிகளும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செப்பனிடப்படாத வீதி அமைப்பு முறை மற்றும், மோசமான முறையில் பராமரிக்கப்படும் வாகனங்கள், சாரதிகளின் கவனயீனம் காரணமாக நேபாலில் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவது வழமையான செயற்பாடாகியுள்ளது. 

கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி நேபாலின் மேற்கு பகுதியில் உள்ள மலை சாலை ஒன்றில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேபாலின் தென் பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியாலிருந்து பயணித்த பஸ்ஸொன்று நேபாலின் தென்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 38 பாதயாத்திரிகர்கள் பலியாகினர்;. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிவந்ததால் இவ்விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.