தோல்விக்கு காரணம் யார் ? டோனி விளக்கம்

தோல்விக்கு காரணம் யார் ? டோனி விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவிடம் தோற்று 4–வது தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய சென்னை அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. ரெய்னா 52 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 65 ஓட்டங்களும், மேக்குல்லம் 28 ஓட்டங்களும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 ஓவர் எஞ்சி இருந்த நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் உத்தப்பா 39 பந்தில் 67 ஓட்டங்களும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) சகீப்–அல்–ஹசன் 21 பந்தில் 46 ஓட்டங்களும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். 

12 ஆட்டத்தில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4–வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து தலைவர் டோனி கூறியதாவது:– 

‘டாஸ்’ தோற்றது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் தொடக்கத்தில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதை பயன்படுத்தி கொல்கத்தா அணி வீரர்கள் நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். 

ரெய்னா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் 10 முதல் 15 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். இதனால் கொல்கத்தா அணிக்கு சவால் கொடுக்க முடியாமல் போனது. இவ்வாறு டோனி கூறியுள்ளார். 

கொல்கத்தா அணி 7–வது வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வென்று முத்திரை பதித்தது. 

இந்த வெற்றி குறித்து கொல்கத்தா தலைவர் காம்பீர் கூறும்போது, எங்களது பந்து வீச்சும், துடுப்பாட்டமுத் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சென்னை அணியை 154 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பானது என்றார். 

சென்னை அணி 13–வது ஆட்டத்தில் ஐதராபாத்தையும், கொல்கத்தா அணி 13–வது போட்டியில் பெங்களூர் அணியையும் நாளை எதிர்கொள்கின்றன.