தமிழர்களின் ஆர்ப்பாட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்: அவுஸ்திரேலிய பொலிஸார்

 

மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்துக்கு வெளியில், இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையில் நாளை புதன்கிழமை இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும் இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிக்கக் கோரியும் தமிழர் அகதிகள் சபை, ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இந்தநிலையில் குறித்த குழுவினரை சந்தித்த விக்டோரியா பொலிஸார் ஆர்ப்பாட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையில் மேற்கொள்ள அவர்கள் இணங்கியதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாளை இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் முதல் நாள் ஆட்டத்தை பார்க்க சுமார் 70 ஆயிரம் பேர் வரை வருவர் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.