தகுந்த காரணம் இல்லாது புகலிடம் கோருவோரை ஏற்றுக் கொள்ள முடியாது - அவுஸ்திரேலியா

புகலிடம் கோரி சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர் எவரும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அனைவரும் அடுத்த விமானத்திலேயே உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை தொடர்பான திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் தவறான வழி நடத்தலை நம்பி வள்ளங்களில் சட்ட விரோதமாக வந்து உயிராபத்தில் சிக்க வேண்டாம் என்று கோரியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், விஸா இன்றி சட்ட விரோதமாக வருபவர்கள் குறித்து விசேட கவனம் எதுவும் செலுத்தப்படாது எனவும் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருபவர்கள் குறித்த அவுஸ்திரேலியாவின் புதிய அறிவிப்பு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன் போது அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சரின் விசேட அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு விவகார ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஜோஸ் அல்வ ரோஸ் (Jose Alvarez) கூறியதாவது, சட்ட விரோதமாக வருவோரை நாட்டிற்கு வெளியில்வைத்து பரிசீலனை செய்யும் நடைமுறையை அவுஸ்திரேலியா மீண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அவுஸ்திரேலியா கடல் எல்லைக்கு வள்ளங்கள் மூலம் வருபவர்கள் நவ்ரு (NAURU) அல்லது மானுஸ் (MANUS) தீவுகளுக்கு அனுப்பப்படுவர். இங்கு நீண்ட காலம் இருக்க நேரிடும்.

புகலிடம் வழங்குவதற்கான உண்மையான காரணம் இல்லாதவர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது. இதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியாக உள்ளது.

ஆட்கடத்தல் காரர்களின் பொய் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நம்பி அநேகர் வள்ளங்கள் மூலம் உயி ராபத்தான கடற்பயணம் மேற்கொள்கின்றனர். இத்தகைய ஆபத்தான கடற்பயணத்தை நிறுத்துவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியாக உள்ளது. இவ்வாறு வருபவர்கள் எந்த நன்மையும் அடையப் போவதில்லை. பணத்தை விரயம் செய்து இந்த உயி ராபத்தான பயணத்தை மேற்கொண்டு வருபவர்களுக்கு புகலிடமோ, விசாவோ கிடைக்கப் போவதில்லை.

இவ்வாறு சட்ட விரோதமாக புகலிடம் கோரி வருபவர்கள் குறித்து எதுவித விசேட கவனமும் செலுத்தப்படாது. புகலிடக் கோரிக்கையை ஏற்பதற்கான உண்மையான காரணமில்லாத எவருக்கும் அவுஸ்திரேலியா வுக்குள் நுழைய முடியாது. அவர்கள் உடனடியாக தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர்.

இதன்படி 257 இலங்கையர்கள் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 87 பேர் சுயமாக விரும்பி நாடு திரும்பினார்கள். இவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்று வழங்கப்பட் டது. ஏனையவர்களை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பியது.

அவுஸ்திரேலியாவிற்கு வருபவர்களுக்கு சிறந்த வசதிகளும் தொழில்வாய்ப்பும் கிடைப்பதாக தவறான வதந்தி பரப்பப்பட் டுள்ளது. இங்கு சட்டவிரோதமாக வருப வர்களுக்காக விஸா எதுவும் தயாராக வைக்கப்படவில்லை. அவ்வாறு வருபவர் களுக்கு விரைவாக பதிலோ, முடிவோ வழங்கப்படாது எதுவித விசேட சலுகையும் கிடைக்காது.

உரிய விஸா இன்றி எவருக்கும் அவுஸ்திரேலியாவில் தங்க சட்ட அனுமதி கிடையாது. இங்கு சட்டவிரோதமாக வருபவர்கள் குறித்து தனித்தனியாக விசாரிக்கப்படுகிறது.

சிறந்த பொருளாதார வசதி, நல்ல தொழில் என்பவற்றை எதிர்பார்த்தே அநேகர் சட்ட விரோதமாக இங்கு வருகின்றனர். சட்ட விரோதமாக வந்துள்ளவர்கள் தாமாக விரும்பி தமது நாட்டிற்குச் செல்ல முன்வந்தால் சர்வதேச இடம்பெயர் அமைப்பினூடாக திருப்பி அனுப்ப தேவையான உதவிகள் வழங்கப்படும்.