ஜெயலலிதாவிற்கு பிணை இல்லை!

ஜெயலலிதாவிற்கு பிணை இல்லை!
2ஆம் இணைப்பு- 
 
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது. 
 
அத்துடன் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. 
 
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்த உயர் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்துள்ளது. 
 
ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க ஆட்சேபனை இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியும் பிணை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை பிணை கிடைத்ததாக வதந்தி பரப்பியதை அடுத்து அந்த செய்தியை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப்பாக வெளியிட்டு வந்த நிலையில் பிணை இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 
1ஆம் இணைப்பு- ஜெயலலிதாவிற்கு நிபந்தனை பிணை! 
 
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமாகிய ஜெயலலிதாவை நிபந்தனை பிணையில் விடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இன்று மதியம் ஜெயலலிதாவின் பிணை மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங் பிணையில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து 3.30 மணிக்கு ஜெயலலிதாவை நிபந்தனை பிணையில் விடுவிக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார். 
 
இதனையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
போயஸ் கார்டன், மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.