ஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த

ஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த

சில குழுக்களும் அமைப்புக்களும் இணைந்து, தனித் தமிழீழத்துக்கான அறைகூவலை விடுத்து வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு உதவி வருகின்றது. இந்த ஈழக் கோரிக்கை நிறுத்தப்பட்டால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் முதல் நபர் நானாவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (12) தெரிவித்தார்.
 
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்இடம்பெற்ற காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாடு கடந்த தமிழீழ அரசுடன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கதைத்துள்ளார்.  யார் எங்கு சென்று கதைத்தாலும் இலங்கையில் பிரிவனவாதத்தை ஏற்படுத்தவோ அல்லது தமிழீழத்தை ஏற்படுத்தவோ ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி முறையை மாற்றும்படி தெற்கு மற்றும் வடக்கிலுள்ள கட்சிகள் கோரி வருகின்றன. அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த முறைமையை மாற்றுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
 
நாங்கள் யுத்தத்தை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தவில்லை. பயங்கரவாதிகளை ஒழிக்கவும் அவர்களிடமிருந்த ஆயுதங்களை கீழே வைக்கவுமே யுத்தத்தை நடத்தினோம். 

30 வருடகால யுத்தத்தால் மக்கள் தங்கள் உடமைகள், உறவுகள் என பலவற்றை இழந்துள்ளனர். 

யுத்தத்தில் பங்கரவாதிகளுடன் இணைந்திருந்த 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை செஷவு செய்துள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நாங்கள் தோல்வியடைவோம் என்று தெரிந்திருந்தும் வடமாகாண சபை தேர்தலை வடக்கில் நடத்தியிருந்தோம். அதில் மக்கள் தாங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களித்தனர். 

வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மக்களுக்கான சேவைகளை வழங்கவேண்டும். 

வடமாகாண மக்களுக்காக தெற்கிலிருக்கும் ஆறு ஒன்றை இரணைமடுவுடன் இணைத்து அதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்க தீர்மானித்தேன்.

அதற்கான நிதியையும் ஒதுக்கிக்கொடுத்திருந்தேன். இருந்தும், அது செயற்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது என்று  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமிழ் இளைஞர், யுவதிகளை நம்பிக்கையின் அடிப்படையில் இலங்கை இராணுவம், பொலிஸ் ஆகியவற்றில் இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். 

அவர்களுக்கு துப்பாக்கிகள் பரீட்சார்த்தமானவை என்று தெரிந்திருந்தும் கூட அவர்களை நம்பிக்கையின் அடிப்படையில் படைகளில் இணைக்கின்றோம் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.  

இந்நிகழ்வின்போது, 18,958பேருக்கான காணி உறுதிகளும் தமிழீழ விடுதiஷப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்தவர்களில் 2,350பேரின் நகைகளையும் ஜனாதிபதி கையளித்தார்.