ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விண்ணப்பிப்போருக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்பதிவுத் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விண்ணப்பிப்போருக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்பதிவுத் திணைக்களம்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் நிதியுதவியுடன் நடமாடும் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நடமாடும் சேவை ஊடாக, எவ்வித கட்டணங்களும் இன்றி, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை, இவ்வாறான நடமாடும் சேவை மூலம் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
 
ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின், மாற்று வழிமுறைகள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து, அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
தேசிய அடையாள அட்டை இல்லாமல் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.