சூதாட்ட தரகருடன் ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிக்கு தொடர்பு - ஆதாரம் வௌியீடு

சூதாட்ட தரகருடன் ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிக்கு தொடர்பு - ஆதாரம் வௌியீடு

கிரிக்கெட் சூதாட்டம் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வீரர்கள் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஊழல் தடுப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் வேலியை பயிர் மேய்ந்த கதையாக ஊழலை தடுக்க வேண்டிய அதிகாரி ஒருவரே சூதாட்ட தரகருடன் தொடர்பு வைத்து இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஐ.சி.சி. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மண்டல அதிகாரி தரம்வீர் சிங் யாதவ். இந்தியாவை சேர்ந்த இவர் இந்திய சூதாட்ட தரகர் அதானு தத்தாவுடன் தொடர்பு வைத்து உள்ளார். 

இந்த இருவருக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒலி நாடாவை பங்காளாதேஷ் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளாதேஷில் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடந்தது. 

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது இருவரும் பேசிய தொலைபேசி உரையாடல் ஒலி நாடாவை தான் அந்த தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. 

இந்த உரையாடலில் சூதாட்டம் பற்றிய தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்படி டாக்கா பொலிசார் சூதாட்ட தரகர் அதானு தத்தாவை கைது செய்து உள்ளனர். 

ஊழல் தடுப்பு அதிகாரியான தரம்வீர்சிங் யாதவ் அவரை ‘இன்பார்மர்’ என்று கூறியதால் பொலிசார் விடுவித்து உள்ளனர். சூதாட்ட தரகருடன் ஊழல் தடுப்பு அதிகாரி தொடர்பு வைத்து இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கிடையே சூதாட்டம் தொடர்பாக நியூசிலாந்து தலைவர் மெக்லம் ஐ.சி.சி.யிடம் அளித்த வாக்குமூலம் வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.