சுற்றுலாப்பயணிகள் விசாவில் சிறீலங்காவை புறந்தள்ளிய சீனா

சிறீலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் உட்பட அண்டை நாட்டுக்காரர்களுக்கு சீனா சுற்றுலாப்பயணிகள் விசா புதிய திட்ட சலுகையை வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

சுற்றுலா மூலமான வருவாயைஅதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விசா இன்றி பீஜிங் நகரில் தங்கலாம் என அறிவித்துள்ளது.

இதன்படி சீனா வழியாக செல்பவர்கள் பீஜிங் நகரில் 72 மணி நேரம் தங்கலாம் எனவும் அவர்களுக்கு விசா தேவை இல்லையெனவும் சீனா அறிவித்துள்ளது.

ஆனால் அவர்கள் அடுத்து செல்ல வேண்டிய நாட்டுக்கான விமான டிக்கெட்டை இதற்கென காண்பிக்க வேண்டும் என்பதுடன் அடுத்த 72 மணி நேரத்துக்குள் அவர்கள் சீனாவை விட்டு வெளியேறி விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பீஜிங்கில் இருந்து வேறு எந்த சீனாவின் பகுதிக்கும் செல்ல அனுமதி இல்லையென்பதுடன் அங்குள்ள பொலிஸ் நிலையமொன்றில் தங்களது விசாவுடன் பதிவு செய்துகொள்ளவேண்டுமெனவும் நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டம் எதிர்வரும் 1 ஆம்  நாள் முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய திட்டம் காரணமாக சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா இந்த புதிய சலுகையை கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, கட்டார் உட்பட 45 நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளது.

சீனாவிடம் தஞ்சமடைந்துள்ள சிறீலங்காவுக்கு இந்த சலுகை வழங்கப்படாமை மஹிந்த ஆட்சியாளர்க்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளதாக தெரியவருகிறது.