கிணறுகளில் கழிவு எண்ணைப் படலம் அதிகரிப்பு ; பிரதேச மக்கள் சுட்டிக்காட்டு

கிணறுகளில் கழிவு எண்ணைப் படலம் அதிகரிப்பு ; பிரதேச மக்கள் சுட்டிக்காட்டு

சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் வடமாகாண முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

சுன்னாகம் பிரதேசத்தில் கிணறுகளில் கழிவு எண்ணை கலந்துள்ளமை தொடர்பான விடயங்களை நேரடியாக கண்டறிய அப்பகுதிக்கு விஜயம் செய்த வடக்கு முதல்வரிடம் பிரதேச மக்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.   

சுன்னாகத்தில் நொர்தேன் பவர் மின் பிறப்பாக்கி அமைந்ததிலிருந்து  நீர், வளி, நிலம் போன்றவற்றில் பாதிப்புக்களை நாம் நன்கு உணர்ந்திருந்தோம். அது தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அதிகாரிகளிடத்தில் முறையிட்டிருந்தோம்.      

இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு 8 அரச அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாக பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அந்த குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று பொது மக்களுக்கு தெரியாது.    

இந்த நீரை பருகுவதால் பல பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூடுதலாக சிறு பிள்ளைகளை பாரிய நோய்கள் பாதிப்பதற்கு கூடிய சாத்தியம் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஏன் எமது பிரச்சனையில் பாராமுகமாக இருக்கின்றார்கள் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.   

அதுமட்டுமின்றி சுன்னாக பிரதேசத்திலுள்ள உணவகங்களிலும் கழிவு எண்ணை கலந்த  நீரே பாவிக்கப்படுகிறது இதனால் எமது எதிர்கால சமுதாயம் பாதிப்படையலாம்.   

மனித நேயம் பற்றிய சிந்தனை இல்லாத செயற்பாடுகளை ஏன் தடை செய்யாமல் அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். பாரதூரமான விளைவுகளை அலட்சியம் செய்துகொண்டு இருப்பது வேதனைக்குரிய விடயம் ஆகும். என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று குடிநீர் திட்டத்தை பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். 

நாளுக்கு நாள் கழிவு எண்ணை கிணறுகளில் அதிகரித்து வருகிறது இதற்கு விரைவில் தீர்வை பெற்றுத்தாருங்கள்   தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் போதுமானதாக காணப்படவில்லை என அவர்கள் முதல்வரிடம் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர்.   

இதன் போது கருத்து தெரிவித்த முதல்வர் விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். அதுமட்டுமின்றி கடல் நீரை சுத்தமாக்கி குடிநீராக்கும் முயற்சியில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.      

இந்த பிரச்சினைகளை கையாள ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது அது மட்டுமின்றி கூடிய விரைவில் கழிவு எண்ணை பிரச்சினைக்கு தீர்வினை  பெற்றுத் தரப்படும்.   

கிணறுகளில் காணப்படும் கழிவு எண்ணை குறித்த ஜப்பானிய பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறியுள்ளேன் அவர்களும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர் என குறிப்பிட்டார்.