காஸா மீதான தாக்குதல் உக்கிரம் ; 1361 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீதான தாக்குதல் உக்கிரம் ; 1361 பாலஸ்தீனர்கள் பலி!
காஸாமுனை மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம் அடைகிறது. 1,361 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்குகிறது.
 
இஸ்ரேல்–காஸாமுனை இடையேயான போர் கடந்த மாதம் 8–ந் தேதி தொடங்கியது.  காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒரே சேர நடத்துகிறது. காஸாமுனையில் ஜபல்யா என்ற இடத்தில் ஐ.நா. நடத்தி வருகிற பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்தார். 
 
அந்த பள்ளிக்கூடம் அருகில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் மறைந்திருந்து தாக்கியபோது, பதிலடி கொடுக்க வேண்டியதாயிற்று என்று இஸ்ரேல் கூறினாலும், இதை நியாயப்படுத்த முடியாது என பான் கி மூன் கண்டித்தார்.
இதற்கிடையே ஷெஜய்யா என்ற இடத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
 
போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலகளாவிய அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை உதாசீனப்படுத்துகிற விதத்தில் காஸாமுனை மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது என்று இஸ்ரேல் மந்திரிசபை நேற்று முன்தினம் கூடி முடிவு எடுத்தது.
 
போரின் 24–வது நாளான நேற்று காலை நிலவரப்படி காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,361 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான். 
 
இஸ்ரேல் 56 வீரர்களையும், பொதுமக்களில் 3 பேரையும் இழந்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தப்பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை அடுத்த சில நாட்களில் முழுமையாக தகர்த்து விடுவோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது.
 
இதற்கு ஏற்ற வகையில் காஸாமுனை மீதான தாக்குதலை உக்கிரம் அடையச் செய்கிறவிதத்தில், மேலும் 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் களம் இறக்குகிறது. அவர்கள் இப்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இதன்மூலம் காஸாமுனை மீதான தாக்குதலில் களம் காணுகிற இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை 86 ஆயிரம் ஆக உயரும்.
 
இஸ்ரேல்–காஸாமுனை இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த வாரம் பாலஸ்தீன தூதுக்குழுவினரை சந்தித்து, போர் நிறுத்த திட்டம் ஒன்றை அளிக்கிறது.
 
ஆனால் காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.