கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - விமானப் போக்குவரத்து இரத்து

கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படை விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர். 

இந்தநிலையில் தற்போது கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படை விடுதி மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்குதலையடுத்து தீவிரவாதிகள்-பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள கட்டிடம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை தாக்குதல் சம்பவத்தை அடுத்து கராச்சி நகருக்கான விமானப் போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக இலங்கையில் இருந்து கராச்சி நகருக்கு செல்லும் விமானங்கள் நேற்றையதினம் இரத்துச் செய்யப்பட்டு, இன்று மீளவும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையிலேயே மீண்டும் அங்கு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐவர் பலியானதாக ஆரம்பத்தில் செய்திகள் வௌியான போதும், எவரும் உயிரிழக்கவில்லை என அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.