கரப்பந்து விளையாடும் பேரழகி: இணையத்தை கலக்கும் கஜகஸ்தானின் சபீனா

கரப்பந்து விளையாடும் பேரழகி: இணையத்தை கலக்கும் கஜகஸ்தானின் சபீனா
விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், 17 வயதிலேயே பேஸ்புக்கில் 1.4 லட்சம் விருப்பங்களை (லைக்) பெற்றிருக்கிறார் ஒரு கரப்பந்து வீராங்கனை.
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி தைவான் தலைநகர் தைபேயில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற கஜகஸ்தான் அணியில் சபினா அல்டின்பெகோவா இடம்பிடித்திருந்தார்.
 
அவர் ஆடும் அழகு ஒருபுறம் இருக்கட்டும். அவரின் அழகு கொள்ளையோ கொள்ளை என உள்ளூர் ஊடகங்கள் வர்ணிக்க, திடீரென பிரபலமாகி விட்டார் சபினா. அதற்குப் பிறகு, சர்வதேச ஊடகங்களும் இவர் பக்கம் கவனத்தைத் திருப்ப, இணையதளங்களிலும் அதிகம் தேடப்படும் பிரபலமாகி விட்டார். இவரின் உருவத்தை அனிமேஷன் செய்து சித்திரத் தொடர்களும் வெளியாகின.
 
“தயவு செய்து என் அழகைவிட, என் ஆட்டத்திறனைக் கவனியுங்கள்” என ரசிகர்களிடம் கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சபினா. ஆட்டத்தைப் பார்க்க வருபவர்கள், சபினா ஒருவர்தான் விளையாடுகிறார் என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என சபினாவின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். சபினா விளையாடும் வீடியோக்கள் யூடியூபில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வருகின்றன.
 
சரி, 15 நாடுகள் பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் எந்த இடத்தைப் பிடித்தது தெரியுமா? 7-வது இடம்.