கத்தி – விமர்சனம்

கத்தி – விமர்சனம்
குறையொன்றுமில்லை, வெண்ணிலா வீடு  என, தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”கத்தி”.
 
விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”, ”துப்பாக்கி”, ”தலைவா” படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்சினைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராத என்று இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது.
 
வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது.
 
பொலிசிடமிருந்து தப்புவதற்காக உடனடியாக தாய்லாந்து – பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், நாயகி சமந்தாவை அங்கு பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.
 
அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே இரசிகர்களுக்கும் தான். ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள், பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, ”கத்தி” மொத்தமும்.
 
கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
 
விஜய் ஜீவானந்தமும், ஆனந்தமுமாக (கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் ‘கத்தி’ கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார்.
 
கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக இரசிகர்களின் பல்சை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் நாயகியின் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் ‘நான் ஈ’ பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளுந்து கட்டியிருக்கிறார்.
 
தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லோக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பது மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கதாபாத்திரத்திற்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.
 
ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லோக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லோகேசன்களிலும் சரி பியித்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.
 
அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் ஆபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.
 
”ரமணா”, ”7ம் அறிவு”, ”துப்பாக்கி” என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ”கத்தி” படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.