ஐ.எஸ்.ஐ.எஸ். ரி. சேட் அணிந்து பேஸ்புக்கில் புகைப்படம் : இருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். ரி. சேட் அணிந்து பேஸ்புக்கில் புகைப்படம் : இருவர் கைது
ஈராக்கில் தீவிரவாத தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக இளைஞர்களை ஒருங்கிணைத்து பேஸ்புக்கில் புகைப்படம் பதிவு செய்த தொண்டியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 
 
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த 26 இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஈராக்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக ரி.சேட்டை ரமலான் தினத்தன்று அணிந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தனர்.   
 
இந்த தகவல் மாவட்ட பொலிசாருக்கு தெரியவந்ததும் பொலிஸார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் தொண்டி பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான்,  முகம்மது ரிஸ்வான் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து திருப்பாலைக்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.    
 
இதில் இரண்டு பேரும் சேர்ந்து திருப்பூர் காதர் பேட்டையில் உள்ள தனியார் ரி.சேட் கம்பெனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பயன்படுத்தும் ரி.சேட் 100 தயார் செய்து தொண்டிக்கு கொண்டு வந்து அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்கள் 24 பேரை ஒருங்கிணைத்து ஈராக்கில் சண்டையிட்டு வெற்றி பெற்று வரும் தீவிரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றவாறு ஒருங்கிணைத்து புகைப்படம் பிடித்து அந்த படத்தை அவர்களின் பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.                                  
 
இதன் பின் அந்த படத்தில் உள்ள அனைவரிடமும் காவல்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மற்ற நபர்களுக்கு இதில் எந்த தொடர்பும் கிடையாது இந்த இரண்டு பேர் வாங்கி வந்த ரி.சேட்டை அணிந்து புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டது தெரியவந்தது.   
 
இதனையடுத்து ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு தொண்டி பகுதியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூலைச்சலவை செய்து தீவிரவாத செயலுக்கு ஆதரவு திரட்டுவது, சட்ட விரோதமாக ஒன்று கூடியது, சதித்திட்டம் தீட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் அப்துல்ரகுமான், முகம்மது ரிஸ்வான் ஆகிய இரண்டு பேர் மீது தொண்டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.