ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் புலிகள் மீதான தடை நீக்கம்

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் புலிகள் மீதான தடை நீக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. 
 
இந்த விசாரணையின் போது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது. 
 
மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
 
இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவுக்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்குறைஞர் கோப் வாதிட்டார்.
 
இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.