எப்படி கண்ணா இப்படி ஷுட் பண்ண? – ரஜினி

எப்படி கண்ணா இப்படி ஷுட் பண்ண? – ரஜினி
ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘மெட்ராஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார் ரஜினி
கார்த்தி, கத்ரீன் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்க, ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘மெட்ராஸ்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
 
சமீபத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக ‘மெட்ராஸ்’ மாதிரியான எதார்த்தமான படங்கள் நடிக்கவிருப்பதாக நடிகர் கார்த்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
பெங்களூரில் இருக்கும் ரஜினிக்கு, ‘மெட்ராஸ்’ படத்தை பிரதயேகமாக திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோருக்கு தொலைபேசியில் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருக்கிறார் ரஜினி.
 
இது தொடர்பாக இயக்குநர் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, “எப்படி இவ்வளவு லைவ்வா படம் எடுத்தீங்க. எப்படி கண்ணா இப்படி ஷுட் பண்ண.? சூப்பரா பண்ணியிருக்கீங்க. 
 
கலக்கீட்டீங்க. அதுவும் கேமிரா வொர்க் எல்லாம் அற்புதமாக இருந்தது. வாழ்த்துகள்! என்று ரஜினி பாராட்டினார்” என மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.