ஆறு கதாநாயகிகள் ஒரே படத்தில்: கலக்கல்தான்

நட்பு, காதல், குடும்பம் என எந்த கதையாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்கிறார் இயக்குனர் அரிராஜன். இளமை ஊஞ்சல் என்ற படத்தை இயக்குகிறார் அரிராஜன்.

அவர் கூறுகையில், சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பு உண்டு என்கிறார்கள். அந்த பார்முலா 50 சதவீதம்தான் வேலை செய்கிறது.

நட்பு, காதல், குடும்பம் என எந்த கதையாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தால் தான் பிசினஸ் பேச வருகிறார்கள்.

இதை அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டேன். நல்ல படம் தருகிறேன் என்று கதைகளை திணிப்பதைவிட, ரசிகர்கள் விரும்பும் படங்களை தருவது வெற்றிக்கு உதவுகிறது.

குடும்பம், காதல் படங்களை இயக்கியதையடுத்து, இளைஞர்களை கவரும் வகையில் இளமை ஊஞ்சல் என்ற படம் இயக்குகிறேன்.

அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம். நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இப்படத்திலும் கவர்ச்சி இருக்கிறது. இது கதையோடு ஒட்டிய ஒன்றாக இருக்குமே தவிர, திணிக்கப்பட்டதாக இருக்காது.

கதாநாயகிகளும் கதையை புரிந்து கொண்டு தடை சொல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஒகேனக்கல், பெங்களூர், மைசூர், ஐதராபாத், மூணாறில் படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.