அல்ஜீரியாவில் எரிவாயு உற்பத்தி நிலையம் முற்றுகை; 48 பேர் பலி

அல்ஜீரியாவிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையமொன்றில் கடந்த 4 நாட்களாக இடம்பெற்றுவந்த முற்றுகை நடவடிக்கையின்போது, குறைந்தபட்சம் 48   பணயக்கைதிகள் மரணமடைந்துள்ளனரென நம்பப்படுகின்றது. 25 பணயக்கைதிகளின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

இவ்வாறு காணப்பட்ட சடலங்கள் ஊழியர்களின் சடலங்களோ அல்லது பணயக்கைதிகளின் சடலங்களோ என்பது தொடர்பில்  முதலில் தெளிவாகத் தெரியவரவில்லை. 

இதேவேளை, சந்தேகத்திற்குரிய 5 இஸ்லாமிய தாக்குதல்தாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

23 பணயக்கைதிகள் மரணமடைந்துள்ளதாக ஏற்கெனவே தெரிவித்த அல்ஜீரிய அதிகாரிகள், இன்னும் பலர் கணக்கில் வராதுள்ளனரெனவும் கூறியுள்ளனர். 

இது இவ்வாறிருக்க, பணயக்கைதிகளை பிடித்துவைத்திருந்த 32 பேரும் கொல்லப்பட்டதாக அல்ஜீரிய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கூறியுள்ளனர். 

வெளிநாட்டு பணயக்கைதிகளை இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் கொலை செய்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முற்றுகை நடவடிக்கை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அந்நாட்டுப் படையினரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பணயக்கைதிகளின் உயிரிழப்புக்கு பயங்கரவாதிகளே காரணமென குற்றஞ்சாட்டியுள்ளனர். இதேவேளை, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜீன் வைவெஸ் லா  டிரியான் பணயக்கைதிகளை பிடித்தமை ஒரு போர் நடவடிக்கையெனக் கூறியுள்ளார்.