அம்புலன்ஸ் வண்டி விபத்தில்: வைத்தியர் உட்பட இருவர் பலி

புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் பத்துளுஓயா 61 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில்  அம்புலன்ஸ் வண்டியொன்று லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வைத்தியர் ஒருவரும் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும் மரணமானதுடன் அதன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
 
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளி ஒருவரை சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு திரும்பி வரும்வழியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் அம்புலன்ஸ் வண்டி மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இவ்விபத்தில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரும் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த சிற்றூழியர் ஒருவருமே இவ்விபத்தில் மரணமானதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய அம்புலன்ஸ் வண்டியின் சாரதி காயங்களுடன் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.