அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 27பேர் பலி

அமெரிக்காவில் கனெக்டிக்கட் என்ற இடத்தில், பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனெக்டிக்கட் என்ற இடத்தில் உள்ள சாண்டி ஹூக் என்ற பள்ளியில் நடந்துள்ளது. ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து சுமார் 27 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் தனது இதயமே உடைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் மன நோயாளிகளைப் போல திடீரென கூட்டத்தை நோக்கி கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுடும் போக்கு அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் 21-ம் திகதி மின்னசோட்டா மாகாணத்தில் உல்ள ரெட் லேக் நகரில் 16 வயது பள்ளி மாணவனான ஜெஃப்ரி வெய்ஸ், வீட்டில் இருந்த தனது தாத்தா மற்றும் அவரது உதவியாளரைச் சுட்டுக் கொன்றான்.

பின்னர் பள்ளிக்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டான். இதில் 5 மாணவர்கள், ஒரு ஆசிரியை, ஒரு பாதுகாவலர் உள்ளிட்ட 8 பேர் இறந்தனர். மேலும் 7 பேருக்கு குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் திகதி உதா மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் 18 வயதான சுலேமன் என்கிற இளைஞர்.

2007-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் திகதி வர்ஜீனியா டெக் பல்கலைக் கழகத்தின் வகுப்பறையில் சோ-சியூங் என்ற மாணவர் சரமாரியாகச் சுட்டதில் 32 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு இறந்தார் சோ சியூங். அண்மைக்கால அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இது.

2007-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் திகதி ஒமாகா நகரிலுள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவத்தில் 8 பேரைச் சுட்டுக் கொன்றார் 19 வயதான ராபர் ஹாக்கின்ஸ் என்ற இளைஞர்.

2008-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் திகதி இல்லியனாய்ஸ் பல்கலைக் கழக வகுப்பறையில், முன்னாள் மாணவர் ஒருவர் சரமாரியாகச் சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் திகதி பர்மங்காம்டன் குடியேற்றக் கல்வி மையத்தில் வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் கண்மூடித் தனமாகச் சுட்டதில் 11 பேர் பலியாகினர்.