அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை தாக்கிய ஈரான்!

அமெரிக்க வான்படையின் ஆளில்லா விமானமொன்றின் மீது இரண்டு ஈரானிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலானது இம்மாதம் 1 ஆம் திகதி நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இத்தாக்குதலால் விமானத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென பென்டகன் தெரிவிக்கின்றது.
மேலும் தாம் ஈரானின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழையவில்லையெனவும் இராணுவத் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி தாக்குதலுக்கு Su-25 போர் விமானங்களை ஈரான் பயன்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.

இத்தாக்குதலானது அந்நாட்டின் புரட்சிகர காவல் படையால் நடத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காரணமாக பென்டகன் இச் செய்தியை தற்போது வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளைகுடா கடல் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் இப்பகுதிகளை கண்காணித்து வருகிறது அமெரிக்கா. கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட ஆளில்லா விமானமொன்று தனது வான்பரப்பிற்குள் நுழைந்ததாகக் கூறி ஈரான் அதனைக் கைப்பற்றியது.

அக்காலப்பகுதியில் இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த விமானத்தை கைப்பற்றுவதற்கு ஈரான் அதிநவீன தொழிநுட்ப உத்திகளை கையாண்டிருந்ததாகவும் நம்பப்பட்டது.