அசைக்க முடியாத சக்தி ஜெயலலிதா

அசைக்க முடியாத சக்தி ஜெயலலிதா

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் விழா மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம் சார்பில் நடைபெற்றது. 

விழாவுக்கு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை ஆதீனம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

விழாவில் மதுரை ஆதீனம் பேசியதாவது:– தமிழக மக்களுக்கு சிறப்பான திட்டங்களை தந்து பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 

திறமையாக நாட்டை வழி நடத்தும் சக்தி படைத்த நமது முதல்–அமைச்சர் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்தோம். 37 தொகுதிகளில் முதல்வர் அம்மாவுக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர். 

தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தது. பெரும்பேறாக கருதுகிறோம். பல்வேறு புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலும் இந்த பிரசாரம் தான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய புண்ணியமாக கருதுகிறோம். 

இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திகழ்கிறார். அவர் இந்திய நாட்டை வழி நடத்துவார். அதற்கான வாய்ப்பு முடிந்துவிட வில்லை. வாய்ப்பு வரும். வருகிற சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா வருவார். அதற்காக நாம் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தயாராக உள்ளோம். ஆன்மீக பேரரசி மங்கையர்கரசிபோல துணிச்சல், ஆற்றல் கொண்டவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. அவரை நாம் இரண்டாவது மங்கையர் கரசியாக பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி பரிசை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மதுரை ஆதீனம், எட்வர்டு மன்ற செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் வழங்கினர். துணைமேயராக நியமிக்கப்பட்ட திரவியத்துக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

விழாவில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, பரவை பேரூராட்சி தலைவர் சி.ராஜா, பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர், சித்திரை ஜோதி, பகுதி செயலாளர்கள் மாரிச்சாமி, தளபதி மாரியப்பன், பூமி பாலகன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், விக்டோரியா எட்வர்டு மன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை வக்கீல் பிஸ்மில்லாகான் தொகுத்து வழங்கினார்.