அகதிகளுக்கென புதிய முகாம் திறந்தது ஆஸி

அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகள் மூலம் வரும் ஆயிரக்கணக்கானவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் வரை அவர்களை அவுஸ்திரேலிய கரைக்கு அப்பால் தடுத்து வைக்கும் நோக்கில் மேலும் ஒரு தடுப்பு முகாமை அந்நாட்டு அரசு திறந்துள்ளது.

தமது நாட்டில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு கடுமையான புதிய திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை வந்துள்ளது.

தற்போது பாப்வா நியூகினியா நாட்டுக்கு சொந்தமான தொலைதூரத் தீவான மானுஸ் தீவுக்கு ஒரு தொகுதி இரானியர்கள் மற்றும் இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு அனுப்பி வைத்துள்ளது.

ஏற்கனவே சிறு தீவு நாடான நவ்ரூவில் அகதித் தஞ்சம் கோருபவர்களை கூடாரங்களை அமைத்து ஆஸி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.

அங்குள்ள நிலமைகள் மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளன.

அவுஸ்திரேலிய அரசின் குடிவரவுக் கொள்கைகள் கடுமையானதாகவோ அல்லது மனித நேயம் கொண்டதோ இல்லை என்று அந்த மனித உரிமை அமைப்புகள் வாதிடுகின்றன.

அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் வழங்கும் மோசமான படகுகளில் சென்றபோது பலியாகியுள்ளனர்.

ஆனால் கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே தமது நடவடிக்கைகள் இருக்கின்றன என்று அவுஸ்திரேலிய அரசு கூறுகிறது.