'மீரியாபெத்தை மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க இராணுவம் தயார்'

'மீரியாபெத்தை மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க இராணுவம் தயார்'
மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தமது வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடத்தை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்ததும், அவ்வீடுகளை நிர்மாணிப்பதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளனர் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையப் பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மீரியாபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான உதவிகளை வழங்க இராணுவம் தயாராக உள்ளது. இதற்காக மண்சரிவு அபாயம் அற்ற பாதுகாப்பான இடத்தை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
பாதுகாப்பான இடங்கள் அடையாளம் காணப்பட்டதும் அரசாங்கத்தின் நிதி உதவியில் இராணுவத்தினரின் ஊடாக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக முப்படைகளின் வீரர்களும் சிரமதான அடிப்படையில் வீடுகளை நிர்மாணிக்க தயாராக உள்ளனர்' என்றார். 
 
அத்துடன், 'அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 1500ற்கும் அதிகமான மக்கள் கொஸ்லந்தை, பூணாகலை கணேசா வித்தியாலயத்திலும் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீட்பு நடவடிக்கைகளின்போது மீட்கப்பட்ட நகைகள், ஆவணங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
 
அனரத்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. அதற்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.