T 20 ஐசிசி தரப்படுத்தலில் இலங்கை முதலிடம்

இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தாலும், T 20 போட்டிகளுக்கான அணிகள் தரவரிசைப்பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐசிசி) சார்பாக அணிகள் பெறும் வெற்றி, தோல்விகளை கணக்கில் கொண்டு, அணிகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இலங்கையில் சமீபத்தில் T 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி கிண்ணத்தை வென்றது.

இந்த நிலையில் நேற்று T 200 போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உலக கிண்ண தொடரில் தோல்வி அடைந்த இலங்கை அணி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டுவென்டி20 உலக கிண்ண தொடரில் களமிறங்க வந்த போது, மேற்கிந்திய தீவுகள் அணி தரவரிசையின் 7வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அதிரடியாக 5 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் 2வது இடத்தில் இருந்து இந்தியா தற்போது 3வது இடத்திற்கு சரிந்துள்ளது.

தரவரிசையின் 4வது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. முதலிடத்தில் இருந்த தென்ஆப்பரிக்கா உலக கோப்பை தொடரில் பெற்ற அடுத்தடுத்த தோல்விகளால், 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. பாகிஸ்தான் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா 7வது இடத்திலும், நியூசிலாந்து 8வது இடத்திலும், வங்கதேசம் 9வது இடத்திலும் உள்ளது. கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணி 10வது இடத்திலும், ஜிம்பாப்வே 11வது இடத்திலும் உள்ளன.