வைத்தியசாலைக்கு பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபடுவோர் அடாவடி

வைத்தியசாலைக்கு பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபடுவோர் அடாவடி

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் மற்றும் பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபட்டிருப்போர் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட சிலர்  தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவதினால் வெளிநோயாளர்கள் மற்றும் நோயர்களை பார்வையிட வருவோர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல தடவைகள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டபோதும் வைத்தியசாலை நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி யாழ். வைத்திசாலைக்கு தனது பிள்ளைக்கும் தனக்கும் 'ஸ்கான்' பண்ணுவதற்காகச் சென்ற தாயோருவரையும் அவருடன் வந்த சகோதரியையும் வைத்தியசாலையின் பின்வாசலில் கடமையில் இருந்த காவலாளி முதுகில் தள்ளி 'போங்கோடி வெளியால்' என்று தள்ளியுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக நோயின் தாக்கம் காரணமாக தன்னால் உடனடியாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் அறிவிக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தார்.

இதேவேளை யாழ். போதனா வைத்திசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்ற கர்ப்பிணித்தாய்மார் மீது வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களும் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டு வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானந்தராஜாவிடம் கேட்டபோது இச்சம்பவம் தொடர்பாக எழுத்து மூலம் சமர்பிப்பதோடு நபர்களை அடையாளம் காட்டினால் சம்மந்தப்பட்ட நபர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.