வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தத் தீர்மானம்

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நாளை காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி ஆனந்தகுமாரசாமி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

பொதுச்சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகா சண்முகரத்தினத்திடம் பொறுப்புக்களை கையளிக்க மறுக்கும் பழைய அதிபர் உடனடியாக பொறுப்புக்களை கையளித்து, பாடசாலையை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

"இடமாற்றம் வழங்கப்பட்டு 3 மாதம் ஆன நிலையில் பழைய அதிபர் பொறுப்புக்களை கையளிக்க மறுக்கின்றார். பதிய அதிபர் பாடசாலையில் கையொப்பமிடுவதை தவிர வேறு எந்த செயற்பாடுகளை செய்ய அனுமதி வழங்கவில்லை.

இதற்கான பதிலை கல்வி திணைக்களம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு உடனடியாக தீர்வுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பாடசாலை பழைய மாணவர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது என  பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கூறினார்.
               
வேம்படி மகளிர் பழைய மாணவர் சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம்  நடாத்த தீர்மானித்துள்ளதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

"இப்பாடசாலை தேசிய பாடசாலை அதற்கு அதிபரை நியமிக்கும் பொறுப்பு பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு உண்டு.
பொதுச் சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டவருக்கு கடமை பொறுப்புக்களை கையளிப்பதற்கு மறுப்பது சட்டத்திற்கு முரணானது.

சட்ட திட்டத்திற்கு அமைய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டு கடமையில் இருந்து விலகி ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பழைய அதிபரின் பொறுப்பு. பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் கடமை புரிவதற்கு தடை இருப்பதை அறிந்து கல்வி திணைக்களம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு, யாழ். வலய கல்வி பணிமணை ஆகியவை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதனடிப்படையில் மாணவர்களின் எதிர்காலக் கல்வியை கேள்விக் குறியாக்காமல் உரியவர்கள் தமது நிலை உணர்ந்து கல்வி அமைச்சினதும் பொது சேவை ஆனைக்குழுவினதும் பணிப்புரைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்' என இந்து மகா சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சட்டம் ஒழுங்குப் பொறிமுறை உறுதிப்படுத்தப்படுவது சமூகத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்க்கு அத்தியவசியமான தேவைப்பாடாகும்.

அண்மைக் காலமாக சட்டத்தையும் ஒழுங்கையும் எமது பிரதேசத்தில் அமுல்படுத்துவதில் இடர்பாடுகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக கல்விப் புலத்தில் இத்தகைய ஒழுங்கீனங்கள் காணப்படுவது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மாணவர்களிடையேயும் சமூகத்தினரிடையேயும் ஒரு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ்விடயங்கள் மாணவர்களின் விழுமியங்கள் விருத்திகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.  இது காலக்கிரமத்தில் சமூக கட்டுமானத்தில் சட்ட ஒழுங்க சீர்குலைவுக்கு இட்டுச் செல்லும் அபாய நிலைமையையும் ஏற்படுத்தும்.

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அதிபர் விவகாரத்தில் கல்வி அமைச்சின் நிர்வாக ஒழுங்குக்கு அமைய அதிபர் நியமனம் இடம் பெற்றும் அது நடைமுறைப்படுத்தப்படாமை கவலையளிக்கும் விடயமாகும்.

இந்நியமனம் மூன்ற மாதகாலமாகியும் நடைமுறைப்படுத்தப்படாமை மக்கள் மத்தியில் நிர்வாகக் கட்டமைப்பின் மீது அவநம்பிக்கையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சினதும் பொதுச் சேவை ஆனைக்குழுவினதும் விடுக்கப்பட்ட பணிப்புக்களை அமுல் செய்தல் கல்வி நிர்வாகத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளின் கடமையென்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

இவ்விடயத்தில் தொடர்ந்தும் காலதாமதம் ஏற்படுத்துவது குறித்த தேசியப் பாடசாலையின் கல்வித்தரத்தில் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்."