வெற்றியுடன் தொடங்கியது பிரேசில் - குரோஷியாவுக்கு ஏமாற்றம்

வெற்றியுடன் தொடங்கியது பிரேசில் - குரோஷியாவுக்கு ஏமாற்றம்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் லீக் போட்டியில் நட்சத்திர நாயகன் நெய்மர் கைகொடுக்க, பிரேசில் அணி, குரோஷியாவை 3-1 என வீழ்த்தியது. 

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கிண்ண கால்பந்து தொடர், நேற்று பிரேசிலில் கோலாகலமாக தொடங்கியது. 

மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. சாவ் பாலோவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் ´ஏ´ பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. 

பரபரப்பாக ஆரம்பித்த முதல் பாதியின் 11வது நிமிடத்தில் பிரேசில்வீரர் மார்செலோ, ´சேம் சைடு ´ கோல் அடித்து இரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் குரோஷியா அணி 1-0 என ஆரம்பத்திலேயே சுலமாக முன்னிலை பெற்றது. 

அசராமல் தொடர்ந்து போராடிய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (29வது நிமிடம்) முதல் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். மும்முரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றனர். 

ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியின் முடிவில், போட்டி 1-1 என சமநிலை வகித்தது. 

தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (71) ஒரு கோல் அடித்தார். இதற்கு குரோஷியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. 

தொடர்ந்து அசத்திய பிரேசில் அணிக்கு ஆஸ்கர் (90+1) மேலும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டநேர முடிவில், பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. 

இதுவரை நடந்த உலகக் கிண்ண தொடர்களில், போட்டியை நடத்தும் நாடு, தொடக்கப் போட்டிகளில் தோற்றதே கிடையாது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலும் நேற்று இச்சாதனையை தக்கவைத்துக்கொண்டது. 

தவிர, குரோஷியா அணிக்கு எதிராக 2 வது வெற்றி பெற்ற பிரேசில் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.