வீட்டை புதுப்பிக்க அரச நிதியைப் பயன்படுத்தினாரா ஜேகப் ஜுமா?

வீட்டை புதுப்பிக்க அரச நிதியைப் பயன்படுத்தினாரா ஜேகப் ஜுமா?

தென்னாபிரிக்காவில் விரைவில் ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அந்நாட்டின் ஆளும்கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி ஜேகப் ஜுமா மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து விசுவாசத்துடன் அவரை ஆதரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 

தற்போது அவரது தனிப்பட்ட வீட்டைப் புதுப்பிக்க அரசு நிதியிலிருந்து 23 மில்லியன் டொலரைப் பயன்படுத்தியதாக ஒரு புதிய குற்றச்சாட்டு அவர் மீது எழுந்துள்ளது. 

அந்நாட்டின் குவாசுலு நடால் மாகாணத்தின் கண்ட்லா கிராமப் பகுதியில் உள்ள ஜுமாவின் பரந்த பண்ணை வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளதை கடந்த இரண்டு வருடங்களாக ஆய்வு செய்த ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு 444 பக்க அறிக்கையாக கடந்த புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. 

நீச்சல்குளம், கால்நடைகளுக்கான உறைவிடம் மற்றும் திரையரங்கு போன்ற சகல வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள அவரது பண்ணை இல்லத்திற்கு அரசு நிதியிலிருந்து 23 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் வெளிவந்துள்ளது. 

இதன் மூலம் அரசாங்க டெண்டர்கள் மீறப்பட்டுள்ளதும், அரசின் திறமையின்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு வாரங்கள் இருக்கும் நிலையில் வெளிவந்துள்ள இந்த அறிக்கையானது முறையற்ற வகையில் ஜனாதிபதி செலவிட்டுள்ள பணத்தின் ஒரு பகுதியாவது திருப்பித் தரப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

பெரிய அளவிலான இந்த மூலதன முதலீடுகளை ஜனாதிபதி தனது தனிப்படத் வசிப்பிடத்திற்கு செலவு செய்து பலன்களை அனுபவிக்கின்றார் என்று பொது நல ஊழியரான துலி மடோன்செலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் ஜுமாவின் வெற்றியை இந்தக் குற்றச்சாட்டும் மிகவும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.