வாடிகனில் கூடிய இஸ்ரேல், பாலஸ்தீனியத் தலைவர்கள்

பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதிகளையும், ஜெருசலமின் கிழக்குப் பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய பிரச்சினைகள் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. 

இது குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தடைபட்ட பேச்சுவார்த்தை கடந்த வருடம் அமெரிக்காவின் முயற்சியினால் மீண்டும் தொடங்கியது. அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த நாடுகளுக்கு விஜயம் செய்த போப் பிரான்சிஸ் இஸ்ரேலின் ஜனாதிபதி ஷிமோன் பெரேசையும், பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அபாஸையும் வாடிகனுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பினை ஏற்று நேற்று இருவரும் வாடிகனுக்கு வந்தனர். அவர்கள் இருவரையும் வாடிகனின் விசாலமான போப்பாண்டவர் மாளிகையைக் கைவிட்டு தான் குடியிருக்கும் சாதாரணமான விருந்தினர் மாளிகைக்கு போப் வரவேற்றார். 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதுவும் அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை பரஸ்பர எதிர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முறிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் முதன்முறையாக இந்த இரு ஜனாதிபதிகளும் நேற்று நேரில் சந்தித்துக்கொண்டனர். 

பின்னர் இந்த மூவரும் கிறிஸ்துவ ஆன்மீகத் தலைவர் பார்த்தலோமிவுடன் வாடிகனின் எந்தவித மத அடையாளங்களும் இல்லாத நடுநிலைத்தளம் எனப்படும் தோட்டம் ஒன்றிற்கு வந்தனர். அங்கு மரங்கள் அடர்ந்திருந்திருந்த பகுதியில் இருந்த அறை ஒன்றில் போப்பிற்கு இருபுறமும் அவர்கள் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இனங்களையும், மதங்களையும் கடந்த நிலையில் இங்குள்ள புனிதர்கள் அனைவரிடமும் சமாதானம், அமைதி குறித்த விருப்பத்தை வெளிப்படுத்த ஒன்றுகூடியுள்ளதாக பிரார்த்தனை சேவைக்குமுன் குறிப்பிடப்பட்டது. தங்கள் மக்களின் அமைதி குறித்த ஏக்கத்தை செயலாக்க கடவுளிடம் அந்த ஜனாதிபதிகள் முறையிட்டதாக பிரார்த்தனை சேவையாளர் குறிப்பிட்டார். 

யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் பிரதிநிதிகளும் பின்னர் இத்தாலி, ஹீப்ரூ, அரபு மற்றும் ஆங்கில மொழியில் பிரார்த்தனைகளை நடத்தினர். அரசியலைத் தாண்டிய இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளின் பிரச்சினைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதுகுறித்து வாடிகன் நிர்வாகம் கருத்து எதுவும் வெளியிடவில்லை. 

அதுமட்டுமின்றி பிராந்திய பிரச்சினைகளில் தேவாலயம் தலையிடுவதில்லை என்பதுவும் இந்தக் கூட்டத்திற்குப்பின்னர் குறிப்பிடப்பட்டது.