வல்லுறவுக்குள்ளான 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவமனை

வல்லுறவுக்குள்ளான 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவமனை

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பாலோத் என்ற மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு மூன்று வயது பெண் பிள்ளையை மருத்துவ பரிசோதனை செய்ய ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை மறுத்துள்ளனர். 

பின்னர் அந்த பாலோத் மாவட்டத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்புர் என்ற நகரில் உள்ள பிம்ராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

பலோத் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த புதன்கிழமையன்று காலை, இந்த 3 வயது சிறுமியும், அவளுடைய அண்ணனும் சைக்கிள் பழுது பார்க்க அருகில் இருந்த சைக்கிள் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த கடையில் இருந்த 25 வயதான சைக்கிள் மெக்கானிக், அந்த சிறுமியின் அண்ணன் சென்ற பிறகு அவளை தனிமையில் அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 

இந்த சம்பவம் அறிந்த கிராமத்தினர் அந்த சைக்கிள் மெக்கானிக்கை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அந்த சிறுமியை பரிசோதனை செய்ய உள்ளூர் ஆரம்ப சுகாதார மையங்களும் மாவட்ட மருத்துவமனைகளும் மறுத்துள்ளன. 

"பெண் ஊழியர்கள் இல்லை, இருந்த பெண் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான பயிற்சி இல்லை, இது மிக சிறிய வயது பெண் குழந்தை" என்றெல்லாம் காரணங்காட்டி அந்த சிறுமியையும் அவளது குடும்பத்தினரையும் மருத்துவமனைகள் வெளியே அனுப்பின. 

தன் பெண் குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தப்பட்டதைவிட பெரிய குற்றம், அவளுக்கு பரிசோதனை மறுக்கப்பட்டதுதான் என்று அந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். 

காலை 8 மணி அளவில் துவங்கி மாலை 8 மணி வரை ஒரு துளி உணவு கூட உண்ணாமல் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னோரு மருத்துவமனையாகத் தேடி அலைந்ததாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்தார். 

இந்த பாலியல் வல்லுறவு தொடர்பிலும், மருத்துவ பரிசோதனை மறுக்கப்பட்டது தொடர்பிலும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.