வறுமையின் கொடுமை: பெற்ற குழந்தையை 13,000 ரூபாவுக்கு விற்ற தாய்

வறுமை காரணமாக தனக்கு புதிதாக பிறந்த கைக்குழந்தையை கவனிக்க இயலாத சூழ்நிலையால் அக்குழந்தையை ரூபாய் பதிமூன்றாயிரத்திற்கு பெண் ஒருவர் விற்றுள்ளார். 

கவுரி தாஸ் என்ற அப்பெண்மணிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். கவுரியின் தாய் பிச்சை எடுத்து வரும் பணத்தை கொண்டு தான் இவர்களது வாழ்க்கை என்ற வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்க இயலாத காரணத்தால் அக்குழந்தையை கவுரி விற்க முடிவு செய்துள்ளார். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் சில நாட்கள் வேலை செய்துள்ளதாக தெரிவித்த கவுரி, ஆனால் தனக்கு அவ்வாறு வேலை செய்ததற்கான சம்பளத்தை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். 

இது குறித்து அம்மாநில அரசுக்கு தெரியவந்ததும், அக்குழந்தையை மீட்ட அதிகாரிகள் அதை மீண்டும் கவுரியிடம் கொடுத்த போது அக்குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைக்கு உணவளிக்க இயலாத நிலையில் நான் எப்படி மீண்டும் அதற்கு உணவளிக்க முடியும் என கேள்வியெழுப்பினார். 

தனக்கு அரசு உதவி அளித்தால் தான் குழந்தையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக கவுரி தெரிவித்தார். தற்போது அரசு இவருக்கு அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரையை மட்டும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

மழை காலங்களில் கவுரியின் தாயார் பிச்சை எடுக்க செல்ல முடியாததால் அவர்கள் அனைவரும் பட்டினி கிடந்ததாக கவுரியின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள் தெரிவித்தனர். 

குழந்தை குறித்த நல்ல முடிவு எடுக்க 60 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள அம்மாநில அரசு, ஒருவேளை அவர் அப்போதும் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதை தத்து கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.