வரதட்சணை தராததால் மணமகளை திருமண மண்டபத்திலேயே விட்டுச் சென்ற மணமகன்

 

வரதட்சணை கொடுத்ததுபோக மேலும் ரூ.4 லட்சம் ரொக்கம், விமான செலவுக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்காததால் திருமண மண்டபத்திலேயே மணப்பெண்ணை விட்டுச் சென்றதாக ஐஎப்எஸ் அதிகாரி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கி அதிகாரி. இவரது 2வது மகள் பவித்ரா (22). பிஎஸ்சி முடித்துள்ளார். எழும்பூர் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ரயில்வே அதிகாரி செங்குட்டுவனின் மகனும் ஐஎப்எஸ் அதிகாரியுமான கோவேந்தனுக்கு பவித்ராவை மணமுடிக்க பேச்சு நடந்தது. ஆனால் பிரச்னை ஏற்படவே பேச்சு முறிந்தது. மீண்டும் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்ட செங்குட்டுவன், ‘எங்கள் மகனுக்கே பெண்ணை கொடுங்கள்‘ என்று கூறியுள்ளார்.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், திருமணத்தின்போது வரதட்சணையாக 50 சவரன், மாப்பிள்ளைக்கு 5 சவரனில் நகை, சீர் சாமான்கள் வாங்க ரூ.2.5 லட்சம், செலவுக்கு ரூ.5 லட்சம் கொடுப்பது, திருமண செலவை இரு வீட்டாரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வது என்று முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த 18ம் தேதி மாலை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 19ம் தேதி காலை 6 மணி முதல் 7.20 மணி வரை திருமணம் நடந்தது. அதன்பின் மாப்பிள்ளை, பெண் இருவரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர். 12 மணிக்கு திருமண மண்டபம் திரும்பினர்.

அப்போது செங்குட்டுவன், அம்மா முத்தமிழ்அரசி ஆகியோர் ‘‘திருமண செலவு அதிகமாகிவிட்டது. அதனால் மேலும் ரூ.4 லட்சம் ரொக்கம், மகன் வேலை செய்யும் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் செல்ல விமான டிக்கெட் செலவு ரூ.1.5 லட்சம் உடனடியாக தரவேண்டும்‘‘ என்று கூறி வந்தனர். மணமகனும் இதையே கூறினார். இதற்கு பெண்வீட்டார் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார், பெண்ணை திருமண மண்டபத்திலேயே விட்டு விட்டு தங்கள் வீட்டுக்கு சென்றனர்.

இதனால் மணமகள் பவித்ரா, நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது பெற்றோருடன் வந்து, புகார் செய்தார். அதில் மணமகன் கோவேந்தன், மாமனார் செங்குட்டுவன், மாமியார் முத்தமிழ்அரசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், இது குறித்து வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனர் சியாமளாதேவி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து போலீசார் கோவேந்தனிடம் நேற்று மாலை விசாரணை நடத்தினர். விசாரணையில், பவித்ராவுடன் வாழ்வதாக அவர் கூறினார். ஆனால் பவித்ரா இதற்கு மறுத்துவிட்டார். ”திருமணத்துக்கு முன்பே பல கோரிக்கைகளை வைத்தனர். திருமணத்துக்குப் பிறகும் மிரட்டினர். இதனால் அவருடன் சென்றால் எனக்கு என்ன ஆகும் என்று தெரியாது. அவருடன் செல்ல விருப்பம் இல்லை” என்று அவர் உறுதியாக கூறிவிட்டார். இதனால் இருவரையும் மீண்டும் இன்று விசாரணைக்கு வரும்படி போலீசார் கூறியுள்ளனர்.